தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்Tamil Nadu Pollution Control Board

வாரியத்தின் முன்னெடுப்புகள்

நீர்ப் பாதுகாப்பு

நீர்ப் பாதுகாப்பு நடவடிக்கையாக, மணலி மற்றும் பேசின் பிரிட்ஜ் பகுதியில் உள்ள மூன்று பெரிய தொழிற்சாலைகள் நாளொன்றுக்கு சுமார் 25 மில்லியன் லிட்டர் (ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் லிட்டர்) நகர வடிகால் கழிவுநீரை மூன்றாம் நிலை சுத்திகரிப்புக்குப் பிறகு, தங்கள் ஆலைகளில் குளிரூட்டும் நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றன. திருப்பூரில் உள்ள சாயப்பட்டறை தொழிற்சாலை உள்பட மாநிலத்தில் உள்ள சாயப்பட்டறை தொழிற்சாலைகள் கழிவுநீரிலிருந்து உபயோகமான நீரை மீட்சி செய்வதற்காக எதிர்மறை சவ்வூடு நிலையங்களை அமைத்துள்ளன. மீட்சி செய்யப்பட்ட நீர் மறு உபயோகம் செய்யப்படுகிறது. சர்க்கரை ஆலைகளில், ஆவியாக்கிகளிலிருந்து திரவமாக்கப்பட்ட நீர் மறு உபயோகம் செய்யப்படுகிறது. இசைவாணை வழங்குவதில் ஒரு நிபந்தனையாக, தொழிற்சாலைகள் மழைநீர் சேமிப்பு அமைப்புகளை நிறுவ அறிவுறுத்தப்பட்டுள்ளன. அனைத்து தொழிற்சாலைகளும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் நிறுவியுள்ளன. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகங்களிலும் மேல்தளத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தூய்மைக்கான நுட்பங்கள்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமானது இறுதிமுறை சுத்திகரிப்பு முறை மட்டுமல்லாமல், ஒருமுகப்படுத்தப்பட்ட அணுகுமுறையில், தூய்மை நுட்பத் திறனை வளர்ப்பதில் அக்கறை கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் பல தொழிற்சாலைப் பிரிவுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்ற தூய்மை நுட்பங்களுக்கு மாறியுள்ளன.

  • எரிசோடா உற்பத்தியில் பாதரசக் கலத்திற்கு பதிலாக சவ்வூடு கலம் பயன்படுத்துதல் .
  • சிமெண்ட் தொழிற்சாலைகளில் காற்று மாசைக் குறைக்க ஈர செய்முறைக்கு பதிலாக உலர் செய்முறையினைப் பின்பற்றுதல் .
  • பிபிசி சிமெண்ட் தயாரிப்பில் 25 முதல் 30 சதவிகிதம் சாம்பலைப் பயன்படுத்துதல் .
  • கந்தக அமிலம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருமுறை மாற்றம் மற்றும் உட்கிரகிக்கும் தொழில்நுட்பத்தை செயல்படுத்துதல்.
  • சயனைடு அற்ற முலாம் பூசுதல் மற்றும் சயனைடு உப்புக்கு பதிலாக வாயு கார்பரைசிங் முறையை வெப்பக் கடினப்படுத்துதலுக்கு பின்பற்றுதல் .
  • மரக்கூழ் மற்றும் காகித ஆலைகள் டயாக்ஸின் உள்பட்ட ஆர்கனோ – குளோரைட்ஸ் உருவாவதைக் குறைக்கும்வகையில் குளோரின் மூலக்கூறு இல்லாத சலவையை மேற்கொள்ள ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றன.
  • ஓசோனைச் சிதைக்கும் பொருள்களைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் முறையாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களைப் பயன்படுத்தி வருகின்றன.

கழிவுக்குறைப்பு

தூய்மையாக்கும் நுட்பங்களைப் பயன்படுத்துவதால், கழிவுகளிலிருந்து பொருள்களைப் பிரிப்பதிலும், கழிவுகளைக் குறைப்பதிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவு நீரிலிருந்து குரோமியமும், உரத் தொழிற்சாலைகளிலிருந்து அம்மோனியாவும் மீட்டெடுக்கப்படுகின்றன. தொழிற்சாலைக் கழிவுநீரை வெளியேற்றாத பூஜ்ஜிய நிலையினை அடைவதற்காக எரிசாராய வடிப்பாலைகள் அறிவுறுத்தப்பட்டன. 7 எரிசாராய வடிப்பாலைகள் கழிவுநீரை, சர்க்கரை ஆலை கழிவு மண்ணுடன் சேர்த்து உயிரியல் உரமாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளன. 5 எரிசாராய ஆலைகள் செறிவூட்டும் முறையில் கழிவுநீரை எரித்து, பூஜ்ய திரவ கழிவுநீர் வெளியேற்றம் நிலையை அடைந்துள்ளன.

எரிசக்தி சேமிப்பு

எரிபொருள் பாதுகாப்பு மற்றும் மீட்புக்கான வழிமுறையாக, அனைத்து எரிசாராய ஆலைகளும் தமது இறுதிக் கழிவிலிருந்து காற்றிலி தொட்டியின் மூலம் மீத்தேன் வாயுவை மீட்டெடுக்கின்றன. பெரிய சர்க்கரை ஆலைகள் உற்பத்தியுடன் இணைந்த மின்நிலையங்களை அமைத்துள்ளன. ஜவ்வரிசி ஆலைகள் தமது செய்முறைக் கழிவுநீரிலிருந்து காற்றிலி தொட்டியின் மூலம் மீத்தேன் வாயுவைப் பிரித்தெடுக்கின்றன. செரிவூட்டப்பட்ட கார்பன் தயாரிப்பில் வெளியாகும் அனல் காற்று மறு சுழற்சி செய்யப்பட்டு கொதிகலனுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் நிலக்கரி மற்றும் விறகு எரிபொருளாக பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட்டதுடன், பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேறுவதும் தவிர்க்கப்பட்டுள்ளது. பிற தொழில்துறை பிரிவுகள் குறைந்த எரிசக்தியைப் பயன்படுத்த ஊக்ககுவிக்கப்படுகின்றன. இது, அத்தொழிற்சாலைகளின் சுற்றுச்சூழல் அறிக்கையின் வாயிலாக தணிக்கை செய்யப்படுகின்றது. வாரியத்தின் சொந்தக் கட்டங்களில் இயங்கும் 18 அலுவலகக் கட்டடங்களில் சூரிய சக்தி பெறுவதற்கான தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், புதிதாகக் கட்டப்பட்டு வரும் அலுவலகக் கட்டடங்களிலும் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்படும்.

தொழில் நுட்ப செயல் விளக்க மையம்

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமானது சட்டங்களைச் செயல்படுத்தும்போதும் கண்காணிப்பிலும் தூய்மைக்கான நுட்பம், கழிவைக் குறைக்கும் நுட்பம், மாற்று முறை மூலம் ஆபத்தான பொருளை நீக்குதல், மறு சுழற்சி, மறுபயன்பாடு, பூஜ்ய நிலை திரவ வெளியேற்றம் மற்றும் தமிழ்நாட்டில் நிலைத்தகு தொழில் வளர்ச்சியைக் கொண்டு வருவதற்கான சிறந்த தொழில் நுட்பம் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 46,000-ஐத் தாண்டி விட்டதால், நிலையான வளர்ச்சியை எட்டும் வகையில் சுற்றுச் சூழல் பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு காண்பது அதைச் செயல்படுத்தும் அதிகாரிகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் சவாலாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் வாரியம், சென்னை ஐ.ஐ.டி-யுடன் இணைந்து ஒரு புதிய தொழில்நுட்ப செயல் விளக்க மையத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக ஐ.ஐ.டி யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு ரூ 5. கோடி நிதியினை வாரியம் ஒதுக்கியுள்ளது.

தொழில் நுட்ப செயல்விளக்க மையத்தின் குழுவானது, அரிசியாலைகள், ஐவ்வரிசி ஆலைகள், துணிக்கு சாயமிடும் சிறிய ஆலைகள் ஆகியவற்றிற்கான சில ஆய்வுகளை நடத்தின. இம்மையம், நகராட்சி அலுவலர்கள், தீயணைப்புத்துறை அலுவலர்கள் மற்றும் தமிழ் நாடு மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலர்களுக்காக திடக்கழிவு நிலநிரப்பு செய்யும் இடங்களில் ஏற்படும் தீயை மேலாண்மை செய்வது குறித்த பயிற்சி வகுப்பை நடத்தியது. மேலும் ஐவ்வரிசி ஆலைகளின் கழிவு நீரின் தன்மை, காற்றற்ற சுத்திகரிப்பு, உயிரி எரிவாயு உற்பத்தி, உயிரி எரிவாயுவின் தரத்தையும் அளவையும் அதிகரிப்பதற்கான செய்முறை ஆகியவற்றை நன்கு புரிந்து கொள்வதற்காக ஒரு தொழில் நுட்ப பயிற்சி பட்டறையை இம் மையம் நடத்தியது. மேலும், ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுநீரை பயன்படுத்தி காற்றில்லா சுத்திகரிப்பு செய்து எரிவாயு எடுப்பதற்கான சிறந்த தொழிற்நுட்ப முறையை செயல்விளக்கம் செய்து காட்டுவதற்கு ஒரு 'மேல் நோக்கி நகரும் காற்றில்லா சேற்றுபடலம்' என்ற அமைப்பினை இம்மையம் வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக மேலும் ஆராய்ச்சி நடந்து வருகிறது.

பசுமைப் போர்வை திட்டம்

மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறையாக, தொழிற்சாலைகள் தங்களது வளாகத்தில் 25 சதவீத நிலப்பரப்பில் அடர்த்தியான கிளைகளைக் கொண்ட மரங்களை வளர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தொழிற்சாலைகள் தங்கள் வளாகங்களிலும் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போதிய அளவு மரங்களை வளர்க்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.